பத்து வகை பலகாரங்கள் தீபாவளி புது வரவு - விகடகவி இதழ்

APF-Press-Release-03.jpg

மதுரை, அனுப்பானடி பகுதியை தலைமையிடமாகக் கொண்ட ‘அட்சய பாத்ரா’ எனும் தனியார் உணவு தயாரிப்பு நிறுவனம். ஏற்கெனவே மதியம் மற்றும் இரவு உணவுகளை ஆன்லைன் மற்றும் மாதாந்திர உணவு சந்தாதாரர்களுக்கு நேரடி டெலிவரி செய்து, மதுரை மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறது.

இந்நிறுவனம் சுமார் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மதுரை, அனுப்பானடி பகுதியில் பிரமாண்ட தொழிற்சாலையாக செயல்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்சய பாத்ராவின் 10 வகை இனிப்பு பலகாரங்களை புதுவரவாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்பதையும், அவற்றின் செய்முறையையும் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு……

மடக்கு பூரி

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு, துருவிய தேங்காய், சர்க்கரை, நெய், முந்திரி, எண்ணெய், உப்பு.

செய்முறை: கோதுமை மாவு, நெய், தேவையான அளவு உப்பு, அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து பூரி தட்டும் பதத்துக்கு முதலில் மாவை தயாரிக்கலாம். பின்னர் ஒரு பாத்திரத்தில் நன்கு உலரவைத்து துருவிய தேங்காய், சர்க்கரை, தூளாக்கிய முந்திரி ஆகியவற்றை கலக்கவும். துருவிய தேங்காய் நன்கு உலர்ந்திருந்தால், பலகாரம் நீண்ட நாள் நன்றாக இருக்கும். இப்போது மடக்கு பூரிக்கான பூரணம் தயார்.

பின்னர் மரக்கட்டை உருளையின் மூலம் பிசைந்த மாவை சின்னஞ்சிறு பூரியாக தயாரிக்கலாம். அதில் பூரணத்தை வைத்து மடித்து, அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அதன் விளிம்புகளை வடிவமைக்கலாம். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக மாறும் வகையில் பூரிகளை நன்கு பொரித்தெடுக்கவும்.

இப்போது குழந்தைகளுக்கு பிரியமான மடக்கு பூரி சுவைப்பதற்கு தயார்!

நெய்யப்பம்

தேவையான பொருட்கள்: அரிசி மாவு, கோதுமை மாவு, பழுத்த வாழைப்பழம், நறுக்கிய தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி, வறுத்த எள், நெய், எண்ணெய்.

செய்முறை: நறுக்கிய தேங்காய் துண்டுகளை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் வெல்ல பாகு காய்ச்சி, பழுத்த வாழைப்பழத்தை நன்கு பிசைந்து, அரைத்து கொள்ளவும்.

இப்போது அரிசி மற்றும் கோதுமை மாவை ஒரு நிமிடத்துக்கு நிறம் மாறாமல் வறுக்கலாம். ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்துள்ள அரிசி மாவு, கோதுமை மாவு, வறுத்த தேங்காய் துண்டுகள், பிசைந்து அரைத்த வாழைப்பழம் ஆகியவற்றை இட்லிமாவு பதத்துக்கு கெட்டியாக கலக்க வேண்டும்.

பின்பு அதை அரைமணி நேரம் ஊறவைத்து, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, வறுத்த எள், ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்க்கவும். இப்போது நெய்யப்பத்துக்கான மாவு தயார்.

பணியார சட்டியை அடுப்பில் வைத்து, அனைத்து குழியிலும் நெய் தடவி மாவை ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரித்தவாறு, மாவின் இரு பக்கத்தையும் பொன்னிறமாக வரும்வரை வேகவைத்தால் சுவையான நெய்யப்பம் தயார்!

மதுர் வடை

தேவையான பொருட்கள்: அரிசி மாவு, ரவை, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய தூள், உப்பு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சிறிதளவு ரவையை சேர்த்து கலக்கலாம். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். இக்கலவையை சூடான எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, சப்பாத்தி மாவின் மென்மையான பதத்தில் மாவை தயாரிக்கவும். மாவு தயாரானதும், அதை உருண்டை பிடித்து, தட்டை போல் தட்டி கொள்ளவும்.

பின்பு எண்ணெயில் வெங்காயம் பொன்னிறம் வருமளவுக்கு நன்கு பொரிக்கவும். மிகவும் மொறுமொறுப்பாக வேண்டுமென்றால் நீண்ட நேரம் எண்ணெய்யில் பொரிக்கலாம். தயாரித்த மதுர் வடையை, தேங்காய் சட்னியுடன் சாப்பிட பரிமாறலாம்.

குல்கந்து ஜாமூன்

தேவையான பொருட்கள்: பிரட், குல்கந்து, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு, நெய், எண்ணெய்.

செய்முறை: ஒரு சூடான கடாயில் தண்ணீர் ஊற்றி, அதனுடன் சர்க்கரையை சேர்த்து. நன்றாக கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து அதில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, துளி எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.இப்போது இனிப்பு பாகு தயார். பிரட்டின் ஓரங்களை நீக்கி, அதன் நடுப்பகுதியை மட்டும் பொடி செய்து, அதனுடன் பால் சேர்க்கவும். பின்பு அதை மாவு பதத்துக்கு நன்றாக பிசைந்து, உருண்டையாகப் பிடித்து கொள்ளவும். சுவையான ஜாமூன் உருண்டைகள் தயார்.

இந்த உருண்டைகளுக்குள் சிறிதளவு குல்கந்து வைத்து, மீண்டும் நன்கு உருட்டிக் கொள்ளவும். சூடான எண்ணெய் அல்லது நெய்யில் குல்கந்து உருண்டைகளை பொன்னிறமாக வருமளவு நன்கு பொரிக்கவும். உருண்டைகள் பொரிந்த பின்பு, அதை தயாரித்து வைத்துள்ள இனிப்பு பாகில் அரைமணி நேரம் நன்கு ஊறவைக்கவும். இப்போது சுவையான குல்கந்து ஜாமூன் சுவைப்பதற்கு ரெடி!

முந்திரி கொத்து

தேவையான பொருட்கள்: முழு பச்சை பாசிப்பயிறு, வெல்லம், அரிசி மாவு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய்.

செய்முறை: வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை கொதிக்க வைத்து பாகு தயாரித்து கொள்ளவும். பின்னர் ஒரு சூடான கடாயில் பாசிப்பயிறை நன்கு வறுத்து, பொடியாக அரைக்கவும்.

பின்பு தேங்காயை பொன்னிறமாக வறுத்து, அரைத்து வைத்துள்ள பாசிப் பயிறு, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் சூடுபடுத்தி கொள்ளவும்.

பின்னர் அதில் கலக்கி வைத்துள்ள பாசிப்பயிறு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து, அனைத்தும் வெல்லப் பாகோடு சேருமாறு நன்கு கலக்கவும். அவை நன்கு கலந்தபின், வெதுவெதுப்பான சூடுடன் இருக்கும்போதே சிறுசிறு உருண்டைகளாக பிடிக்கவும். பின்பு வேறொரு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, ஆகியவற்றுடன் தண்ணீர் கலந்து, இட்லி மாவின் அடுத்த நிலை பதத்துக்கு நன்றாக கலக்கவும்.

தயாரித்த உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும். கொத்தாக வேண்டுமென்றால் இரண்டு, மூன்று உருண்டைகளை சேர்த்து ஒன்றாக பொரிக்கவும்.நன்கு பொரிந்த பின்பு, இனிப்பு கொத்துகளை பரிமாறவும். இவற்றை சிறிது நாட்கள் வைத்திருந்தும் சாப்பிடலாம்.

ஜவ்வரிசி லட்டு

தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி, சர்க்கரை, மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, நெய், முந்திரி.

செய்முறை: தேவையான அளவு ஜவ்வரிசியை இரவு முழுவதும் ஊறவைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி, அதில் முந்திரிகளை பொன்னிறமாக வறுத்து, அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் மீண்டும் சிறிது நெய் ஊற்றி, நன்கு ஊறிய ஜவ்வரிசி, சர்க்கரை சேர்த்து கெட்டியாகாமல் கிளறவும். அதனுடன் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து, நெய் முழுவதும் வற்றுமளவுக்கு நன்கு கலக்க வேண்டும்.

இப்போது வறுத்தத முந்திரிகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும். வெதுவெதுப்பான சூடு இருக்கும்போதே, ஜவ்வரிசி கலவையை உங்களின் விருப்பத்துக்கு லட்டு வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். இப்போது தயாரித்த லட்டுகளின்மேல் ஓர் முந்திரியை வைத்து அலங்கரித்தால், தித்திக்கும் ஜவ்வரிசி லட்டு தயார். இது 4 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஆப்பிள் தேங்காய் பர்ஃபி

தேவையான பொருட்கள்: தோல் சீவிய ஆப்பிள், துருவிய தேங்காய், சர்க்கரை, குங்குமப்பூ, நுணுக்கிய ஏலக்காய், உடைத்த பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், பிஸ்தா.

செய்முறை: கடாயில் தோல் சீவிய ஆப்பிள், துருவிய தேங்காய், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியற்றை சேர்த்து, மெதுவான சூட்டில் நன்கு வதக்கவும். அவை ஒன்றாக சுண்டி வதங்கிய பின், அதில் ஏலக்காய் பொடி, பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், பிஸ்தா போன்றவற்றை சேர்க்கவும். இந்த கலவை நீர் தன்மையின்றி வருமளவுக்கு நன்கு கலக்கவும். ஐந்து நிமிடத்துக்கு பின்பு அடுப்பை அணைத்து விடவும்.

இந்த கலவையை 3-4 இன்ச் உள்ள நெய் பரப்பிய சதுர தட்டில் அல்லது பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் உலரவைத்து, அதனை தட்டைக் கரண்டியால் நன்கு அமுக்கி பரப்பிவிடவும். இப்போது பர்ஃபி தயார். பின்பு பர்ஃபியை ஒரு இன்ச் சதுர வடிவில் வெட்டவும். அதை 2 மணி நேரம் உலரவைத்தால், அதன் வடிவம் மாறாமல் கெட்டியான பதத்துக்கு வரும். இப்போது சதுரமாக நறுக்கிய பர்ஃபியை, சதுர வடிவ பாத்திரத்தில் இருந்து எடுத்து பரிமாறவும்.

பூண்டு முறுக்கு

தேவையான பொருட்கள்: அரிசி மாவு, பூண்டு, பெருங்காயம், சீரகம், எள், வெண்ணெய், உப்பு, எண்ணெய்.

செய்முறை: முதலில் பூண்டை தோல் நீக்கி விழுது போல் அரைத்து கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், வெண்ணெய், எள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி, முறுக்கு மாவை தயாரித்து கொள்ளலாம்.

அரிசி மாவுடன் வெண்ணெய் நன்கு கலந்த பின்பு, அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். மாவுடன் தண்ணீர், சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். அதில் தயாரித்து வைத்துள்ள முறுக்கு மாவை குழலில் வைத்து, விருப்பத்துக்கேற்ற வடிவத்தில் பிழிந்து விடவும். பின்பு அதை எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான பூண்டு முறுக்கு சாப்பிட தயார்!

கார தட்டை

தேவையான பொருட்கள்: அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து பொடி, வறுத்த பொரிகடலை, கடலை பருப்பு, நுணுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகாய் தூள், உப்பு, எண்ணெய்.

செய்முறை: கடலை பருப்பை தண்ணீரில் நன்கு ஊறவைக்கவும். அதே நேரத்தில் கடாயில் அரிசி மாவை நன்கு வறுத்து, எடுத்து கொள்ளவும். அதே கடாயில் உளுந்து பொடியை வறுத்து எடுக்கவும். ஒரு கப் அரிசி மாவுக்கு 2 ஸ்பூன் அளவுக்கு உளுந்து மாவு சேர்க்க வேண்டும். வறுத்த மாவுகளை தனி பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். வறுத்த மாவுகளுடன் பொரிகடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், கறிவேப்பில்லை, நுணுக்கிய பூண்டு மற்றும் ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

தண்ணீர், சிறிது சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்து கொள்ளவும். தட்டை மாவு தயார். இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து, அதை உள்ளங்கையில் வைத்து தட்டைபோல் அமுக்கவும். ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி, அதை நன்கு பொரிக்கவும். இரண்டு புறமும் நன்கு பொரிந்த பின், அதை எடுத்து சிறிது நேரம் எண்ணெய் வடிய வைத்தால், காரமான தட்டை சாப்பிட தயார்!

சீப்பு சீடை

(சீப்பு சீடை படம் இந்த இதழ் வலையேறும் வரை கிடைக்கவில்லை. அதனால் என்ன வாசகர்கள் யாரேனும் இதை முயற்சித்தால் படம் அனுப்பவும் )

தேவையான பொருட்கள்: அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து பொடி, பாசிபருப்பு பொடி, தேங்காய் பால், உப்பு, எண்ணெய்.

செய்முறை: உளுந்து பொடி, பாசிபருப்பு பொடி தயாரிப்பதற்கு உளுந்தையும் பாசிபருப்பையும் வறுத்து அரைத்து, பொடியாக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து பொடி, பாசிபருப்பு பொடியுடன் உப்பு, தேங்காய் பால், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி, அதனுடன் தண்ணீர் தெளித்து, மாவை மிருதுவாக தயாரிக்கவும்.

தயாரித்த மாவை சீப்பு சீடை வடிவ தட்டு வைத்த முறுக்கு குழலில் வைத்து பிழியவும். பின்பு பிழிந்த மாவை மோதிர வடிவ அளவுக்கு பாதி பாதியாக வெட்டவும்.

வெட்டிய மாவை எடுத்து, விரலில் வைத்து மோதிரம் போல் சுருட்டி, இருபுறமும் இணையுமாறு மடக்கி கொள்ளவும். சீப்பு சீடை பொரிப்பதற்கு தயார். கடாயில் எண்ணெய் ஊற்றி, தயாரித்து வைத்துள்ள சீடையை பொரிக்கவும். சீடை பொன்னிறமாக பொரிந்த பின்பு, அதை எடுத்து எண்ணெய் வடிந்த பின், காற்று புகாத பாத்திரத்தில் வைத்து, ஒரு வாரம் மொறுமொறுப்புடன் சுவைத்து மகிழலாம்.

இதுகுறித்து அன்னபாத்ரா உணவு நிறுவன தலைமை நிர்வாகி சுந்தரேசன் கூறுகையில், “எங்கள் நிறுவனம் மதுரையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக, வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப தரமான உணவு பொருட்களை நவீன தொழில்நுட்ப முறையில் வழங்கி வருகிறோம். தரமே எங்களின் தாரக மந்திரம். இதனால் 2500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சந்தாதாரராகி உள்ளனர். ஒருமுறை சுவைத்தால், மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் எங்களின் உணவு தயாரிப்புகள்! வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.