Table of Contents
தித்திக்கும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
தீபாவளி என்னும் சொல்லிற்கு தீப ஒளி என்று பொருள். தீபாவளி என்ற சொல்லை கேட்டவுடன் அனைவருக்கும் ஓர் உற்சாகம் பிறப்பது இயல்பு. இதற்கு இத்தீபத் திருநாளில் நாம் அணியும் புத்தாடைகள், தித்திக்கும் இனிப்புகள், பாரம்பரிய பலகாரங்கள், மற்றும் மத்தாப்புகள் ஆகியவைகளே காரணம். தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்பூட்ட இதோ ருசியான சிறந்த தீபாவளி பலகாரங்கள்.
சுவையான தீபாவளி பலகாரங்கள்
நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளியை மேலும் தித்திப்பாக கொண்டாடுவதற்காக இதோ அசத்தும் சுவையான தீபாவளி பலகாரங்கள்.
1. மடக்கு பூரி
2. நெய்யப்பம்
3. மதுர் வடை
4. குல்கந்து ஜாமூன்
5. முந்திரி கொத்து
6. ஜவ்வரிசி லட்டு
7. ஆப்பிள் தேங்காய் பர்ஃபி
8. பூண்டு முறுக்கு
9. கார தட்டை
10. சீப்பு சீடை
சுவையான தீபாவளி பலகாரங்கள்
மேலே பார்க்கப்பட்ட பத்து உணவுகளின் செய்முறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த செய்முறைகளை பயன்படுத்தி தித்திக்கும் தீபாவளியை பாரம்பரிய சுவையான உணவுகளுடன் கொண்டாடுங்கள்.
மடக்கு பூரி
செய்முறை
- முதலில், கோதுமை மாவு, நெய், தேவையான அளவு உப்பு அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து பூரி தட்டும் பதத்திற்கு மாவை தயாரிக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் நன்கு உலர வைத்த துருவிய தேங்காய், சர்க்கரை, நொறுக்கிய முந்திரி ஆகியவற்றை கலக்கவும். துருவிய தேங்காய் ஈரப்பதமின்றி நன்கு உலர்ந்திருந்தால் பலகாரம் நீண்ட நாள் நன்றாக இருக்கும். இப்போது மடக்கு பூரி தயாரிப்பதற்கான பூரணம் தயார்.
- சப்பாத்தி உருட்டியை பயன்படுத்தி பூரியை தயாரிக்கவும். தயாரித்து வைத்துள்ள பூரணத்தை பூரியினுள் வைத்து மடித்து விருப்பத்திற்கேற்ப ஓரங்களில் வடிவமைக்கவும்.
- ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை பொன்னிறம் வரும் வரையில் நன்கு பொரித்தெடுக்கவும்.
- இப்போது குழந்தைகளுக்கு பிரியமான மடக்கு பூரி சுவைப்பதற்கு தயார்.
நெய்யப்பம்
செய்முறை
- நறுக்கிய தேங்காய் துண்டுகளை நெய்யில் பொன்னிறம் வரும் வரையில் வறுக்கவும்.
- அதன் பின்பு வெல்ல பாகு காய்ச்சி எடுத்து வைக்கவும்.
- பழுத்த வாழைப்பழத்தை நன்கு பிசைந்து அரைத்து கொள்ளவும்.
- இப்போது அரிசி மாவையும் கோதுமை மாவையும் ஒரு நிமிடத்திற்கு நிறம் மாறாமல் வறுக்கவும்.
- ஓர் பெரிய பாத்திரத்தில் தயாரித்து வைத்துள்ள அரிசி மாவு, கோதுமை மாவு, வறுத்த தேங்காய் துண்டுகள், பிசைந்து அரைத்த வாழைப்பழம் ஆகியவற்றை இட்லி மாவின் பதத்திற்கு கெட்டியாக கலக்கவும்.
- பின்பு அதனை அரை மணி நேரம் ஊறவைத்துவிட்டு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, வறுத்த எள், ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்க்கவும். இப்போது நெய்யப்பத்திற்கான மாவு தயார்.
- பணியார சட்டியை அடுப்பில் வைத்து அனைத்து குழியிலும் சிறிதளவு நெய் விடவும். தயாரித்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரித்தவாறு மாவின் இருப்பக்கத்தையும் பொன்னிறம் வரும் வரை வேகவைத்தால் சுவையான நெய்யப்பம் தயார்.
மதுர் வடை
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவும், சிறிதளவு ரவையையும் சேர்த்து கலக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
- இந்த கலவையை சூடான எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சப்பாத்தி மாவின் மென்மையான பதம் போன்று மாவை தயாரிக்கவும்.
- தற்போது மாவு தயாரானவுடன் அதனை உருண்டை பிடித்து தட்டை போல் தட்டி கொள்ளவும்.
- பின்பு வெங்காயம் பொன்னிறம் வருமளவிற்கு எண்ணெயில் நன்கு பொறிக்கவும். மிகவும் மொறுமொறுப்பாக வேண்டுமென்றால் நீண்ட நேரம் எண்ணெய்யில் பொரிக்கவும். தயாரித்த மதுர் வடையை பொருத்தமான தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
குல்கந்து ஜாமூன்
செய்முறை
- ஓர் சூடான கடாயில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்க்கவும். பின்பு அதனை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது நேரம் கழித்து அதில் ஏலக்காய் பொடி,குங்குமப்பூ, துளியளவு எலுமிச்சை சாறு போன்றவற்றை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.இப்போது இனிப்பு பாகு தயார்.
- பிரட்டின் ஓரங்களை நீக்கி அதன் நடுப்பகுதியை மட்டும் பொடி செய்துகொண்டு அதனுடன் பால் சேர்க்கவும்.
- பின்பு அதனை மெதுவான மாவின் பதத்திற்கு நன்றாக பிசையவும். இப்போது அதனை உருண்டை பிடித்து கொள்ளவும். சுவையான ஜாமூன் உருண்டைகள் தயார்.
- இந்த உருண்டைகளுக்குள் சிறிதளவு குல்கந்து வைத்து மீண்டும் நன்கு உருட்டிக்கொள்ளவும்.
- சூடான எண்ணெய் அல்லது நெய்யில் குல்கந்து உருண்டைகளை பொன்னிறம் வருமளவிற்கு நன்கு பொரிக்கவும்.
- பொன்னிறமாக உருண்டைகள் பொரிந்தபின்பு அதனை தயாரித்து வைத்துள்ள இனிப்பு பாகில் அரை மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
- இப்போது எச்சில் ஊறும் சுவையான குல்கந்து ஜாமூன் சுவைப்பதற்கு தயார்.
முந்திரி கொத்து
செய்முறை
- வெதுவெதுப்பான தண்ணீரில் வெல்லத்தை கொதிக்கவைத்து வெல்ல பாகு தயாரித்து கொள்ளவும்.
- ஓர் சூடான கடாயில் பச்சை பாசி பயறை நன்கு வறுத்து சிறிது நேரம் கழித்து அதனை பொடியாக அரைக்கவும்.
- பின்பு தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதில் அரைத்து வைத்துள்ள பாசி பயறு மற்றும் ஏலக்காய் பொடி போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் சூடுபடுத்தி அதனுடன் கலக்கி வைத்துள்ள பாசிப்பயறு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து, அவை அனைத்தும் வெல்ல பாகோடு சேறுமாறு நன்கு கலக்கவும்.
- அவை நன்கு கலந்த பின்பு வெதுவெதுப்பான சூடுடன் இருக்கும் போதே அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
- பின்பு வேறு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் கலந்து இட்லி மாவின் அடுத்த நிலை பதத்திற்கு கலககவும்.
- தயாரித்த உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும். கொத்தாக வேண்டுமென்றால் இரண்டு மூன்று உருண்டைகளை சேர்த்து ஒன்றாக பொரிக்கவும்.
- நன்கு பொரிந்த பின்பு இனிப்பு கொத்துகளை பரிமாறவும். இதனை சிறிது நாட்கள் வைத்தும் சாப்பிடலாம்.
ஜவ்வரிசி லட்டு
செய்முறை
- தேவையான ஜவ்வரிசியை ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- ஓர் கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரிகளை பொன்னிறமாக வறுத்து அதனை ஓர் தனி கிண்ணத்தில் எடுத்த்துக்கொள்ளவும்.
- அதே கடாயில் மீண்டும் சிறிது நெய் ஊற்றி நன்கு ஊறிய ஜவ்வரிசி, சர்க்கரை சேர்த்து கட்டிப்படாமல் கிளறவும்.
- அதனுடன் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து கலக்கவும்.
- நெய் ஊற்றி நெய் முழுவதும் வற்றும் அளவிற்கு நன்கு கலக்க வேண்டும்.
- இப்போது வறுத்து வைத்துள்ள முந்திரிகளை சேர்த்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- வெதுவெதுப்பான சூடு இருக்கும் போதே ஜவ்வரிசி கலவையை உங்களின் விருப்பத்திற்கேற்ற அளவில் உருண்டையாக லட்டு வடிவத்தில் உருட்டிக்கொள்ளவும்.
- இப்போது தயாரித்த லட்டுகளின் மேல் ஓர் முந்திரியை வைத்து அலங்கரித்தால் தித்திக்கும் ஜவ்வரிசி லட்டு தயார். இது நான்கு நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.
ஆப்பிள் தேங்காய் பர்ஃபி
செய்முறை
- கடாயில் சீவிய ஆப்பிள், துருவிய தேங்காய், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியற்றை சேர்த்து மெதுவான சூட்டில் நன்கு வதக்கவும்.
- அனைத்தும் ஒன்றாக சுண்டி வதங்கிய பின்பு அதில் ஏலக்காய் பொடி, பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், பிஸ்தா போன்றவற்றை சேர்க்கவும்.
- இந்த கலவை மெதுவான நீர் தன்மையின்றி வருமளவிற்கு நன்கு கலக்கவும். ஐந்து நிமிடத்திற்கு பின்பு அடுப்பை அணைத்து விடவும்.
- இந்த கலவையை 3-4 இன்ச் உள்ள நெய் பரப்பிய சதுர தட்டில் அல்லது பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் உலரவைத்து அதனை தட்டைக்கரண்டி கொண்டு நன்கு அமுக்கி பரப்பிவிடவும். இப்போது பர்ஃபி தயார்.
- பின்பு பர்ஃபியை ஒரு இன்ச் சதுர வடிவமாக வெட்டவும். அதனை இரண்டு மணி நேரம் உலரவைத்தால் அதன் வடிவம் மாறாமல் கெட்டியான பதத்திற்கு வரும்.
- இப்போது சதுரமாக நறுக்கிய பர்ஃபியை சதுர வடிவ பாத்திரத்தில் இருந்து எடுத்து பரிமாறவும்.
பூண்டு முறுக்கு
செய்முறை
- முதலில் பூண்டை விழுது போல் அரைத்து கொள்ளவும்.
- ஓர் அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், வெண்ணெய், எள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி முறுக்கு மாவை தயாரித்து கொள்ளவும்.
- வெண்ணெய் நன்கு மாவுடன் கலந்த பின்பு அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
- மாவுடன் தண்ணீர், சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
- ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். அதே நேரத்தில் தயாரித்து வைத்துள்ள முறுக்கு மாவை முறுக்கு குழலில் வைத்து விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் பிழிந்து விடவும்.
- பின்பு அதனை எடுத்து எண்ணெய்யில் பொரித்தது எடுத்தால் சுவையான பூண்டு முறுக்கு தயார்.
கார தட்டை
செய்முறை
- கடலை பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். அதே நேரத்தில் கடாயில் அரிசி மாவை நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.
- அதே கடாயில் உளுந்து பொடியை வறுத்து எடுக்கவும். ஒரு கப் அரிசி மாவிற்கு இரண்டு மேஜை கரண்டி அளவிற்கு உளுந்து மாவு சேர்க்க வேண்டும். வறுத்த மாவுகளை ஓர் தனி பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
- வறுத்த மாவுகளுடன் பொறிக்கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், கறிவேப்பில்லை, நுணுக்கிய பூண்டு மற்றும் ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
- தண்ணீர் மற்றும் சிறிது சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்து கொள்ளவும். தட்டை மாவு தயார்.
- இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து அதனை உள்ளங்கையில் வைத்து தட்டைபோல் அமுக்கவும்.
- ஓர் சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை நன்கு பொரிக்கவும்.
- இரண்டு புறமும் நன்கு பொரிந்த பின்பு அதனை எடுத்து சிறிது நேரம் எண்ணெய் வடிய வைத்தால் காரமான தட்டை தயார்.
சீப்பு சீடை
செய்முறை
- உளுந்து பொடி, பாசி பருப்பு பொடி தயாரிப்பதற்கு உளுந்தையும்,பாசி பருப்பையும் வறுத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து பொடி, பாசி பருப்பு பொடியுடன் உப்பு, தேங்காய் பால், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி அதனுடன் தண்ணீர் தெளித்து மாவை மிருதுவாக தயாரிக்கவும்.
- தயாரித்து வைத்துள்ள மாவை சீப்பு சீடை வடிவ தட்டு வைத்த முறுக்கு குழலில் வைத்து பிழியவும்.
- பின்பு பிழிந்த மாவை மோதிர வடிவ அளவிற்கு பாதி பாதியாக வெட்டவும்.
- வெட்டிய மாவை எடுத்து விரலில் வைத்து மோதிரம் போல் சுருட்டி இரு புறங்களும் இணையுமாறு மடக்கி கொள்ளவும். சீப்பு சீடை பொரிப்பதற்கு தயார்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்துள்ள சீடையை பொரிக்கவும்.
- சீடை பொன்னிறமாக பொரிந்த பின்பு அதனை எடுத்து எண்ணெய் வடிந்த பின் காற்று போகாத பாத்திரத்தில் வைத்து ஒரு வாரம் மொறு மொறுப்புடன் சுவைக்கலாம்.
மேற்கண்ட உணவுகளை செய்து ருசித்து பார்த்து தித்திக்கும் தீபாவளியை மேலும் தித்திப்புட்டுங்கள்.
மேலும் சுவையான உணவுகளுக்கு… Visit us Atchayapathra Foods